search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடநாடு விவகாரம்"

    கொடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #KodanadIssue #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார்.

    இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

    இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

    கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதல்- அமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார்.

    இப்பிரச்சினை குறித்து நான், கடந்த 14-1-2019 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, “பத்திரிக்கையாளர் மாத்யூ வெளியிட்ட கொடநாடு நிகழ்வுகள் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான விசாரணை நடைபெற முதல்வர் பதவியிலிருந்து விலகிட அறிவுறுத்தவும் நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”என்று கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், இன்று வரை அக்கோரிக்கை மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    எனவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டு மென்றும்; தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வருகின்ற 24-1-2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு, எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KodanadIssue #DMK #MKStalin

    காட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பல தலைவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.

    காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. தான். 

    தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி தி.மு.க.வால் செய்யப்பட்ட நாடகம். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

    கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு தி.மு.க. நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர்.

    நான் எதற்கும் அஞ்சமாட்டேன், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன் என தெரிவித்தார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கொடநாடு வீடியோ தொடர்பான விஷயங்களை விவரித்தனர்.

    அதன்பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார். 

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம்சாட்டி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளார் என தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார். #KodanadEstate #KodanadVideo
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.

    ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாடு சம்பவம் தொடர்பாக ‌சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.

    இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

    அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த ‌சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் ‌சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

    விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் சயன், மனோஜ் இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூம் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 

    விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ் வரும் 18ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் விசாரணையின் போது வழக்கறிஞருடன் வரும் 18ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் வருமாறு நீதிபதி சரிதா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  #KodanadEstate #KodanadVideo
    கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார்.



    இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அரசியலில் தங்களை நேரடியாக எதிர்க்க முடியாத சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக கூறினார்.

    “கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.

    தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
    புதுடெல்லி:

    கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்றதில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த வீடியோ உண்மை இல்லை என தெரிவித்தார். அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.

    இதையடுத்து அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், மேத்யூ சாமுவேல், அந்த வீடியோவில் பேசிய மனோஜ், சயன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மனோஜ், சயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேத்யூ சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
    ×